உக்ரைனில் பாதுகாப்பாக இருந்தோம். தாயகம் திரும்பிய கே.வி.குப்பம் மாணவர் பேட்டி


உக்ரைனில் பாதுகாப்பாக இருந்தோம். தாயகம் திரும்பிய கே.வி.குப்பம் மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2022 11:15 PM IST (Updated: 7 March 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

போர் நடக்கும் உக்ரைனில் பாதுகாப்பாக இருந்ததாக தாயகம் திரும்பிய கே.வி.குப்பம் மாணவர் கூறினார்.

கே.வி.குப்பம்

போர் நடக்கும் உக்ரைனில் பாதுகாப்பாக இருந்ததாக தாயகம் திரும்பிய கே.வி.குப்பம் மாணவர் கூறினார்.

பாதுகாப்பாக இருந்தோம்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தன் என்கிற மாணவர் உக்ரைனில் இருந்து திரும்பிஉள்ளார்.  தாய் நாடு திரும்பியது குறித்து மாணவர் வேந்தன் கூறியதாவது:-
நான் 2020- 21-ம் கல்வியாண்டில் உக்ரைனில் உள்ள உஸ்ஹோரோத் தேசிய பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தேன்.

 தற்போது அங்கு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் தங்கியிருந்த கல்லூரி விடுதி போர் நடைபெறும் பகுதியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு எவ்வித போர்குறித்த பதற்றமோ, குண்டு வெடிப்போ இல்லை. இதனால் பாதுகாப்பாகவே இருந்தோம். வங்கிகள் திடீர் என்று மூடப்பட்டுவிட்டதால் எங்கள் வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியவில்லை. ஏ.டி.எம். எந்திரமும் செயல்படவில்லை. 

இந்திய அரசு அதிரடி

இன்டர்நெட், செல்போன் சிக்னல்கள் சரியாகக் கிடைப்பதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் என்னுடன் அங்கு எம்.பி.பி.எஸ். படிக்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் செலவுக்கு வைத்திருந்த பணத்தைப் பிறருக்கும் கொடுத்து உதவியதால்தான் எங்கள் தேவைகளைத் தடையில்லாமல் பூர்த்தி செய்ய முடிந்தது. நான் எப்போது வீடு திரும்புவேன் என்று என் தாய் தவித்துக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசு அதிரடியாக மேற்கொண்ட முயற்சியால் டெல்லி வரை வந்து சேர்ந்தோம். டெல்லியில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்கள் 30 பேருடன் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தோம். 

கடந்த 28-ந் தேதி உக்ரைனில் உள்ள கல்லூரி பஸ்சில் ஹங்கேரி வரை பயணித்தோம். அப்படி வரும்போது வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவே 24 மணி நேரம் ஆகிவிட்டது. இதில் ஹங்கேரி எல்லையைக் கடக்க மட்டும் 14 மணி நேரம் ஆனது. அந்த அளவிற்கு வழி எங்கும் பஸ்கள் வரிசையாக சென்றபடி நெரிசலாக இருந்தது. ஹங்கேரிக்கு 1-ந் தேதி வந்தோம். ஹங்கேரியில் இந்திய அரசு சார்பில் தங்குவதற்கு இடம், உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தது. 

ஆன்லைன் வகுப்பு

 கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தியது போன்று உக்ரைனில் உள்ள எங்கள் கல்லூரி ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என்று எங்களுக்குக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, போர் முடியும் வரை வீட்டில் இருந்தபடியே படிப்போம். என்றார். 

இதுகுறித்து அவருடைய தாயார் உமா மகேஸ்வரி கூறுகையில் மீண்டும் உக்ரைன் நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

Next Story