கொத்தடிமை முறை குறித்து தெரிந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்


கொத்தடிமை முறை குறித்து தெரிந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போலீஸ் டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2022 11:25 PM IST (Updated: 7 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை முறை குறித்து தெரிந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

வேலூர்

கொத்தடிமை முறை குறித்து தெரிந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கூறினார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர் சரக காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் மனித கடத்தலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.ஆனிவிஜயா தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போதும் கொத்தடிமை முறை உள்ளது. இதனை தடுக்க அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சில இடங்களில் கொத்தடிமை முறை காணப்படுகிறது. கொத்தடிமை முறை குறித்து தெரிய வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலூர் சரகத்தில் 50 கிராமங்களில் கொத்தடிமை முறை இருந்தது கண்டறியப்பட்டது.

சிறுவர்கள் கொத்தடிமையாக...

பஸ், ரெயில் நிலையம், சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் சிறுவர்கள் பழங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதை காணலாம். அவற்றை நாம் சாதாரணமாக நினைத்து கடந்து சென்று விடுகிறோம். அந்த சிறுவர்கள் கொத்தடிமையாக கூட வேலை செய்யலாம். சிறுவர்கள் கொத்தடிமையால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தால் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இல்லாமல் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து வேறு பகுதியாக இருந்தால் அங்கு மாற்றி கொள்ளலாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் புகார் அளிக்க வந்தால் அதை பெற்று சி.எஸ்.ஆர். அல்லது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு டி.ஐ.ஜி. பேசினார்.

இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story