மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் முறையீடு
குவாரிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்படாதது குறித்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் முறையீடு செய்தனர்.
கரூர்,
முறையீடு
மாட்டுவண்டி மணல் குவாரிகள் திறப்பு குறித்து அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 மாதம் ஆகி உள்ளது. இந்நிலையில் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறியும், அதற்கான பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கரூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள நீர்வளம் மற்றும் கனிம மேலாண்மை உதவி செயற்பொறியாளரிடம் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் கோரிக்கைகள் குறித்து முறையீடு செய்தனர். அப்போது மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து காத்திருந்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
பின்னர் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளுவதற்கு தஞ்சாவூரில் முற்றுகை போராட்டம் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடக்கிறது.
கும்பகோணத்தில் ஒரு குவாரி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் போர்ட்டல் திறந்தவுடன் உடனடியாக மணல் அள்ளுவதற்காக ஒரு நிலைமை வந்துவிடும். ஆனால் கரூர் போன்ற மாவட்டங்களில் அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறாமல் இருப்பது இன்னும் நம்முடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்க கூடிய மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய சிரமங்களை உருவாக்கும். கரூரில் ஏன் அந்தப் பணிகள் நடைபெறவில்லை என்பதை தெரிந்து கொள்வதற்காக இருக்கக்கூடிய உதவி செயற்பொறியாளரை சந்தித்து, குறைகளை சொல்லி இருக்கிறோம். அனுமதிக்காக அனைத்தும் அனுப்பப்பட்டு இருக்கிறது எனவும், 15 நாட்களுக்குள் அனுமதி கிடைத்துவிடும் என கூறியுள்ளார்.
காவிரியில் 4 இடங்களில்...
கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பேர் மாட்டு வண்டி தொழிலை நம்பியிருக்கிறார்கள். காவிரியில் 4 இடங்களில் குவாரிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. அமராவதிக்காக அறிவிப்பு வரவில்லை. அமராவதிக்கும் அறிவிப்பு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அதுதான் ஒட்டுமொத்த மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் அளிக்கும். தவறும்பட்சத்தில் போராட்டங்களை நோக்கித்தான் போகவேண்டி உள்ளது, என்றார். பின்னர் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story