ஆற்காடு அருகே மகள் காதல் திருமணம் செய்த தகராறில் விவசாயி வெட்டிக் கொலை


ஆற்காடு அருகே மகள் காதல் திருமணம் செய்த தகராறில் விவசாயி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 7 March 2022 11:54 PM IST (Updated: 7 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே மகள் காதல் திருமணம் செய்த தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஆற்காடு

ஆற்காடு அருகே மகள் காதல் திருமணம் செய்த தகராறில் விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காதல் திருமணம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது 45), விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் இவரது மூத்த மகள் சினேகா கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அருகே உள்ள கீராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

சசிதரனுக்கு சொந்தமான விவசாய நிலம் கீராம்பாடி கிராமத்தில் உள்ளது. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் சசிதரனின் மகளை காதல் திருமணம் செய்து கொண்டதால் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சசிதரன் அவரது மகன் சுரேந்தர் ஆகியோர் விக்னேஷ்வரன் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலை சசிதரன் நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வேலைக்குச் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த விக்னேஷ்வரனின் தந்தை மணியை பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதை அறிந்த மணியின் மகன்களான விக்னேஷ் (25), பசுபதி (27) ஆகிய இருவரும் சென்று சசிதரனை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்திலேயே சசிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி, இவரது மகன்கள் பசுபதி, விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story