புறக்காவல் நிலையம் அருகே கொட்டகை அமைத்து சாராயம் விற்ற 9 பேர் கைது


புறக்காவல் நிலையம் அருகே  கொட்டகை அமைத்து சாராயம் விற்ற 9 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2022 12:25 AM IST (Updated: 8 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக வாணியம்பாடியில் புறக்காவல் நிலையம் அருகே கொட்டகை அமைத்து சாராயம் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக வாணியம்பாடியில் புறக்காவல் நிலையம் அருகே கொட்டகை அமைத்து சாராயம் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

சாராய விற்பனையை கண்டித்து மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை செய்வதாக மாவட்ட காவல்துறைக்கு பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

சாராயம் விற்கப்படுவது குறித்து போலீசுக்கு தகவல் அளிப்பவர்கள் யார் என்பதை சாராய வியாபாரிகள் அறிந்து,தகவல் அளிப்பவர்களின் வீடுகள், வாகனங்களை ஆட்கள் வைத்து  தாக்கி வந்தனர்.

இதனை கண்டித்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது வாலிபர் ஒருவர் தீக்குளிக்கவும் முயன்றார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் சாராயம் விற்பனை செய்யப்பட்ட கொட்டகைக்கு தீ வைத்தனர். 

9 பேர் கைது

சாலை மறியல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் 50 போலீசார் நேதாஜிநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பதுங்கி இருந்த சாராய கும்பலை சேர்ந்த பானு (வயது 35), முனுசாமி (50), ராணி (55), ஜோதி (40), ராஜேஸ்வரி (45), சேட்டா (40), பார்த்திபன் (35), சிரஞ்சீவி (38), உதயகுமார் (37) ஆகிய 9 பேரை கைது செய்தனர். 

மறியல்நடைபெற்ற இடத்தின் அருகே வாணியம்பாடி தாலுகா புறக்காவல் நிலையம் உள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் திறந்துவைத்தார்.

புறக்காவல் நிலையம் 

அதனால் அந்தப்பகுதியில் சாராயம் பெருமளவு குறைக்கப்பட்டு இருந்தது. அவர் பணி மாறுதல் செய்யப்பட்டு செங்கல்பட்டுக்கு சென்றதால் மீண்டும் அந்த புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல் விடப்பட்டது. 

இதனை தொடர்ந்து புறக்காவல் நிலையத்தின் அருகே உள்ள கட்டிடத்தில் சாராய பாக்கெட்டுகள் தயார் செய்வது, அங்கேயே கொட்டகை அமைத்து விற்பனையும் நடைபெற்று வந்தது.

சாராயம் விற்பனை, தயாரிப்பதை தடுக்க அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்திற்கு போலீசார் யாரும் நியமிக்காமல் விடப்பட்டதால், அங்கு மீண்டும் சாராய விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது.

இந்த இடத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், அரை கிலோ மீட்டர் தூரத்திலேயே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்கள் மறியல் காரணமாக மூடியே கிடந்த புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு, போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story