கொலையாளிகளை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியல்


கொலையாளிகளை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 March 2022 12:29 AM IST (Updated: 8 March 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

துணி வியாபாரியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

துணி வியாபாரியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி 2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 துணி வியாபாரி அடித்துக்கொலை

திருவண்ணாமலை பட்டேல் அப்துல்ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமத் (வயது 27), துணி வியாபாரி. கடந்த 4-ந் தேதி இரவில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக திருவண்ணாமலை தென்னைமர தெருவை சேர்ந்த முன்னா (25), அவரது தாய் ஷமா, தென்னைமர தெருவை சேர்ந்த விக்கி, அண்ணாநகரை சேர்ந்த அப்பு, இந்திரா நகரை சேர்ந்த மிதுலன், இவரது தம்பி வமித்ரன் ஆகியோர் சேர்ந்து முகமத்திடம் தகராறு செய்து அவரது முதுகில் இரும்பு ராடால் அடித்து கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முகமத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருவண்ணாமலை தாமரை குளம் அருகில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது முகமத்தை கொலை செய்தவர்களை கைது செய்தால்தான் அவரது உடலை அடக்கம் செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர். 

 2-வது நாளாக சாலை மறியல்

போலீசார் உத்தரவாதம் அளித்ததன் பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் முகமத்தின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டு அவரது வீட்டிற்கு வந்தனர்.

கொலையாளிகளை போலீசார் கைது செய்யாததால் 2-வது நாளாக நேற்று மாலை 4 மணி அளவில் அவர்கள் மீண்டும் தாமரைகுளம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர். 

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத முகமத்தின் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

பேச்சுவார்த்தை 

இரவு 7 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் காமராஜர் சிலை அருகே மறியல் செய்யப்போவதாக அங்கிருந்து புறப்பட்டனர். 

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தாமரைக்குளம் அருகிலேயே மீண்டும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கொலையாளிகளை கைது செய்தால் மட்டுமே முகமத்தின் உடலை அடக்கம் செய்வோம். அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரவு 10 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Next Story