காரில் செல்லும் வழியில் மாணவி வரைந்த ஓவியத்தை ரசித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் காரில் செல்லும் வழியில் மாணவி வரைந்த ஓவியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரசித்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் காரில் செல்லும் வழியில் மாணவி வரைந்த ஓவியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரசித்தார்.
ஓவியம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகர்கோவிலுக்கு காரில் வந்தார். பேலஸ் ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்த போது அவரை எதிர்பார்த்து கொளுத்தும் வெயிலில் சாலையோரமாக ஒரு மாணவியும், ஒரு மாணவரும் நின்று கொண்டிருந்தனர். இதை கவனித்த மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார். மாணவர்கள் நின்ற பகுதியிலேயே கார் நிறுத்தப்பட்டது.
உடனே காரின் கண்ணாடியை இறக்கி, அந்த மாணவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். உடனே அவர்களில் மாணவி ஆப்ரின் ஜெஸிக்கா (வயது 18) என்றும், நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருவதாகவும், தன்னுடன் நிற்கும் மாணவன் தனது தம்பி ஜெர்சோன் ரிச் சேம் (15) என்றும், அவன் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் அந்த மாணவி, தான் தங்களையும் (மு.க.ஸ்டாலின்), முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியையும் ஓவியமாக வரைந்துள்ளேன். அதை தங்களிடம் கொடுப்பதற்காகத்தான் உங்கள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றார். உடனே அந்த ஓவியங்களை வாங்கி பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நன்றாக வரைந்திருக்கிறீர்கள். அவற்றை தனது வீட்டில் மாட்டிக் கொள்கிறேன் என கூறி காரில் வாங்கி வைத்துக் கொண்டார். மேலும் அவர்களை பாராட்டிய அவர், நன்றாக படியுங்கள் என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்-மாணவியும், அவர்களது பெற்றோர் அருள் மனோஜ் சாம்- ஜெசி ஆகியோரும் முதல்-அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முதல்-அமைச்சரின் இந்த சந்திப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story