தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 8 March 2022 1:21 AM IST (Updated: 8 March 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாநகரில் நேற்றுகாலையில் மழை பெய்தது. பின்னர் அவ்வப்போது வானம் மேக மூட்டமாக இருந்தது.
மழையும் காலை முதல் இரவு வரை விட்டு, விட்டு பெய்தது. இதனால் கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து குளிர்ச்சியான காற்று வீசியது.
ஈரப்பதம்
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணி நடைபெற்று வருகிறது. பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்த நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் சில இடங்களில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து விவசாயிகள் காத்து இருக்கின்றனர்.
தஞ்சையை அடுத்த சக்கரசாமந்தம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் ஈரப்பதத்தை பொருட்படுத்தாமல் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தற்போது பெய்து வரும் மழையால் உழுந்து, எள் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை நெல் சாகுபடிக்கும், நிலக்கடலை சாகுபடிக்கும் இந்த மழை ஏற்றது என விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல் வல்லம், நாஞ்சிக்கோட்டை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்தனர்.
பாபநாசம்
பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  பல இடங்களில் பலத்த மழை பெய்ததால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பாதிக்கப்பட்டது. மேலும் அறுவடை பணிகள், வைக்கோல் கட்டும் பணிகள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
மழைஅளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
மதுக்கூர்-40, நெய்வாசல் தென்பாதி-34, அதிராம்பட்டினம்-32, மஞ்சலாறு-20, அணைக்கரை-18, திருவிடைமருதூர்-17, ஒரத்தநாடு-18, பட்டுக்கோட்டை-8, கும்பகோணம்-5, அய்யம்பேட்டை-4, கல்லணை-3, பாபநாசம்-1, குருங்குளம்-1, திருவையாறு-1.

Next Story