நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் மனு
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி மனு
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 193 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
வரதராஜன்பேட்டை ஆரோக்கியபுரத்தை சேர்ந்த எட்வர்ட்ராஜ் கொடுத்த மனுவில், தான் வரதராஜன்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் இரவு நேர காப்பாளராக பணியாற்றியதாகவும், தன்னை பள்ளி நிர்வாகம் திடீரென வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், நீக்கியதற்கான காரணத்தை கேட்டபோது தன்னை தாக்கினர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. கல்வி அதிகாரிகளிடம் மனு அளித்தும் தனக்கு நீதி கிடைக்கவில்லை. தன்னை தாக்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
திருமானூர் ஒன்றியம், திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், தங்களது கிராமத்தில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். கடந்த காலங்களில் 25 முதல் 30 ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இது நாள் வரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தீ விபத்து மற்றும் நீரில் மூழ்கி இறந்து போன இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கினார். பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story