கர்நாடக பட்ஜெட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கமே அதிகம்; சித்தராமையா சொல்கிறார்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கமே அதிகம் இருப்பதாக சட்டசபையில் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு:
பட்ஜெட் மீது விவாதம்
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 7-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2022-23-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால் சபை 7-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
சாதனைகளை கூறவில்லை
இந்த ஆட்சி காலத்தில் எடியூரப்பா 2 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்தவர். ஆனால் பசவராஜ் பொம்மை, ஜனதா பரிவாரில் இருந்து வந்து பா.ஜனதாவில் சேர்ந்தார். அங்கு மந்திரியாகி, முதல்-மந்திரி ஆகியுள்ளார். அவரது தந்தை ஜனதா பரிவாரை சேர்ந்தவர். அதனால் அவர் எடியூரப்பா வழியை பின்பற்றாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று நான் கருதினேன். ஆனால் அவர் தனது முந்தையை கொள்கையை கைவிட்டு எடியூரப்பா பாதையில் தான் பட்ஜெட் தயாரித்துள்ளார்.
அதனால் அவரது இந்த பட்ஜெட் எனக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இது டபுள் என்ஜின் அரசு அல்ல. டப்பா அரசு. மக்கள் விரோத, மக்களுக்கு துரோகம் செய்யும் பட்ஜெட். இது எந்த இலக்கும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த 3 ஆண்டு பா.ஜனதா அரசின் சாதனைகளை கூறவில்லை.
துறை வாரியான நிதி
இந்த பட்ஜெட்டில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளின் தாக்கமே அதிகமாக உள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது துறை வாரியான நிதி ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து 6 மண்டலங்களாக சுருக்கப்பட்டது. இதனால் துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. அதே நடைமுறையை தான் பசவராஜ் பொம்மையும் பின்பற்றியுள்ளார்.
கர்நாடகத்தின் கடன் ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 366 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி வட்டி செலுத்த வேண்டும். அத்துடன் ரூ.14 ஆயிரம் கோடி அசலையும் சேர்த்தால், ஆண்டுக்கு கடன் மற்றும் வட்டிக்கு ரூ.43 ஆயிரம் கோடி செலுத்த வேண்டி வரும். ஆண்டுக்கு ஆண்டு கடனுக்கான அசலும், வட்டியும் அதிகரித்து கொண்டே சென்றால் வளர்ச்சி பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும். இதுபற்றி அரசு சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
ஆர்.அசோக் பற்றிய சித்தராமையா கருத்தால் சிரிப்பலை
கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தனது இருக்கையை விட்டு எழுந்து சென்றார்.
அதுபோல் தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னாவும் நடமாடி கொண்டிருந்தார். அதற்கு அதிருப்தி தெரிவித்த சித்தராமையா, "மந்திரி ஆர்.அசோக் வெளியே செல்வதாக இருந்தால் சென்றுவிடுங்கள். இப்படி நின்று பேசிக்கொண்டிருந்தால் எப்படி" என்றார்.
அதற்கு ஆர்.அசோக், "சார் நான் நீர் பருக வெளியே செல்ல எழுந்தேன். நீங்கள் இவ்வாறு கூறிவிட்டதால் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்" என்றார்.
அதற்கு சித்தராமையா, "நீங்கள் எனது நல்ல நண்பர். நீர் உங்களிடமே வரும். நீங்கள் இருக்கையில் அமருங்கள்" என்றார். அதைத்தொடர்ந்து பேசிய ஆர்.அசோக், "நீங்கள் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்த நான், ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்களுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கவில்லை. ஆனால் ஜனதா பரிவாரில் இருந்து வந்த பசவராஜ் பொம்மைக்கு முதல்-மந்திரி பதவி கிடைத்துள்ளதாக கூறினீர்கள். அது உண்மை தான். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை பின்பற்றுவதில் பசவராஜ் பொம்மை எங்களையும் மிஞ்சிவிட்டார். நீங்கள் கூட ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து வந்து காங்கிரசில் சேர்ந்து முதல்-மந்திரி ஆனீர்கள். அதே கட்சியில் இருந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அந்த பதவி கிடைக்கவில்லை" என்றார்.
அப்போது எடியூரப்பா எழுந்து, "மந்திரி ஆர்.அசோக் வெளியே செல்ல வந்தார். மீண்டும் அவர் இருக்கைக்கு சென்றுவிட்டார்" என்றார். இந்த ருசிகரமான விவாதத்தின்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.
Related Tags :
Next Story