‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 March 2022 2:53 AM IST (Updated: 9 March 2022 11:38 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ஈரோடு திருமால்நகர் நாராயணவலசு ரேஷன் கடை முன்பு சாக்கடை வடிகால் உள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி பல மாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாக்கடை அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, ஈரோடு.

  
குப்பையை அகற்ற வேண்டும் 

கோபியில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் நாகர்பாளையம் ரோடு செல்கிறது. அந்த ரோட்டில் 2 இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பையில் இருந்து தூசுகள் பறந்து அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீதும் படுகிறது. எனவே ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், கோபி.
  
வீணாகும் குடிநீர்

ஈரோடு மூலப்பட்டறை நால் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்படுகிறார்கள். மேலும் தண்ணீர் ரோட்டில் வீணாக செல்வதால் அந்தப்பகுதியில் உள்ள ரோடும் சகதியாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  இளங்கோ, ஈரோடு.
  
நோய் பரவும் அபாயம் 

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி முரளி கிராமத்தில் ரேஷன் கடை அருகே கழிவு நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இந்த பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால், கடந்த 2 வருடங்களாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கிநிற்கிறது. அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் சென்னம்பட்டி முரளி கிராமத்தில் சாக்கடை வசதி அமைத்துதர வேண்டும்.
 பொதுமக்கள், சென்னம்பட்டி.
  
போக்குவரத்துக்கு இடையூறு

ஊஞ்சலூர் அருகே உள்ள காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான இங்கு பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதற்காக வருகிறார்கள். அவர்கள் வரும் கார், இருசக்கர வாகனங்கள் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் இதை சரிசெய்ய ஆவன செய்வார்களா?
  பொதுக்கள், கொடுமுடி.
  
ஆபத்தான குழி

ஈரோடு எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து செல்லும் பவானி ரோட்டில் ஆபத்தான பெரிய குழி உள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற பலர் இதுவரை இந்த குழியில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந் துள்ளார்கள். 4 சக்கர வாகனங்கள் கூட இந்த குழியில் ஏறி இறங்கும்போது தடுமாறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆபத்தான அந்த குழியை உடனே சீரமைக்க வேண்டும்.
  கிருஷ்ணன், ஈரோடு. 


Next Story