பர்கூர் மலைப்பகுதியில் விவசாயியை கரடி கடித்து குதறியது
பர்கூர் மலைப்பகுதியில் விவசாயியை கரடி கடித்து குதறியது.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் சோளகனை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஈரையன் (வயது 50) விவசாயி. இவர் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார். கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை இவர் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் சேகரித்து வருவது வழக்கம்.
வழக்கம்போல் தீவனங்கள் சேகரிப்பதற்காக ஈரையன் வனப்பகுதிக்குள் சென்றார். அப்போது புதர் மறைவில் இருந்த ஒரு கரடி திடீரென வெளியே வந்து, ஈரையனை தாக்கியது. கால், கை என பல இடங்களில் அவரை கடித்து குதறியது.
கரடி கடித்துக்குதறியதால் வலி தாங்க முடியாமல், “அய்யோ, அம்மா” என்று ஈரையன் அபயக்குரல் எழுப்பினார். சற்று தூரத்தில் சென்று கொண்டு இருந்த தொழிலாளர்கள் சிலர் அவரின் சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்தார்கள்.
பின்னர் கம்புகளை எடுத்து வீசி கரடியை துரத்தினார்கள். மேலும் இதுபற்றி பர்கூர் வனச்சரகர் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தார்கள். அவர் அங்கு வந்து ஈரையனை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
டாக்டர்கள் ஈரையனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீவனம் பொறுக்க சென்ற விவசாயியை கரடி தாக்கியது அப்பகுதி விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story