ஈரோடு மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க தொட்டிகள் வைக்கப்படுமா?; பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் குப்பைகள் சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குப்பை தொட்டி
ஈரோடு மாநகராட்சி குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சி என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வண்ணக்கோலங்கள் போட்டு அந்தபகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டன. எனவே நகர்ப்புறங்களில் குப்பை சேருவது தவிர்க்கப்பட்டது.
இதுபோல் குப்பை தொட்டிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டன. இப்போது ஈரோடு மாநகராட்சியில் தவிர்க்க முடியாத சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் குப்பை தொட்டியை பார்க்க முடியாத நிலையை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். மேலும் பொது இடங்களில் குப்பை கொட்டினால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகைகளும் குப்பையை வீசுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
குப்பை மேடுகள்
குப்பை தொட்டி இல்லை. வீதி முனைகளில் குப்பைகள் இல்லை என்பது சிறப்புக்கு உரிய விஷயம் என்றாலும், புறநகர் பகுதிகள், குடியிருப்புகளை ஒட்டிய காலி இடங்கள் குப்பை மேடுகளாக மாறி வருவது வருத்தத்துக்கு உரியதாக உள்ளது. இதுபற்றி ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
குப்பை இல்லாத ஈரோடு மாநகராட்சி திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டமாகும். தினசரி வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க வாகனங்களில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக வந்து குப்பைகளை எடுத்துச்செல்கிறார்கள். ஆனால், அவர்கள் வரும்போது வீடுகளில் ஆட்கள் இருந்தால் மட்டுமே குப்பையை கொடுக்க முடியும். குடும்ப தலைவர், குடும்ப தலைவி என 2 பேரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் காலையில் சென்று இரவில் திரும்புகிறார்கள். தூய்மை பணியாளர்கள் சில இடங்களில் பரபரப்பாக அவர்கள் புறப்படும் நேரத்தில் வருகிறார்கள். சில இடங்களில் அவர்கள் வீடுகளில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு வருகிறார்கள். அப்படியே சிறிய குப்பை தொட்டிகளில் கழிவுகளை போட்டு வாசலில் வைத்துச்சென்றால், தெரு நாய்கள் புரட்டிப்போட்டு வீதியை நாசப்படுத்துகின்றன. இதனால் அக்கம்பக்கத்தினரிடம் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த தொல்லை வேண்டாம் என்று கிடைக்கும் நேரத்தில் குப்பையை மூட்டைகட்டி குடியிருப்புகள் இல்லாத பகுதிகளில் கொண்டு போட்டு விடுகிறார்கள். இதனால் அந்த பகுதிகள் மாசு பகுதிகளாக மாறி வருகின்றன. கோழிக்கடை கழிவுகள், வீடுகளின் இடிபாடுகள், தொழிற்சாலை கழிவுகள் கூட இப்படி கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
குப்பை இல்லாத மாநகராட்சி
எனவே ஈரோடு மாநகராட்சியில் புதிதாக குப்பை தொட்டிகள் வைத்து, குப்பைகளை சேகரிக்கலாம். ஒவ்வொரு முறை குப்பைகள் அகற்றப்படும்போதும், குப்பை தொட்டிகள் தூய்மைப்படுத்தப்பட்டால் அந்த பகுதி தூய்மையாக இருக்கும். குப்பை சேகரிப்பவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கவும் தடை இருக்காது. வண்டியில் குப்பை போட முடியாதவர்கள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டிகளில் அவற்றை போடுவதால், பொது வெளிகள் மாசு படுவது தடுக்கப்படும். ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்து, அதன் பிறகும் குப்பைகளை வீதியில் வீசுபவர்கள், பொது இடங்களில் போடுபவர்கள் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கையும் எடுக்கலாம். இதை ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சி என்பதை விட குப்பை இல்லாத மாநகராட்சி என்ற நிலையே சிறப்பானதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story