சேலம் புதிய பஸ் நிலையத்தில் கடைக்குள் புகுந்து கேரள வாலிபர் ரகளை-மனநலம் பாதித்தவரா? போலீசார் விசாரணை
சேலம் புதிய பஸ்நிலையத்தில் கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட கேரள வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ்நிலையத்தில் கடைக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட கேரள வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
கேரள வாலிபர்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏறி ரகளையில் ஈடுபட்டார். அவர் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றி ரோட்டில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
இதையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அங்கேயும் அவர் ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவரது பெயர் தனிஷ்நாயர் என்பதும், கேரளாவை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அவர் தப்பினார்.
கடைக்குள் புகுந்து ரகளை
இந்தநிலையில், அதே வாலிபர் நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குள் சென்று ரகளையில் ஈடுபட்டதோடு கடையில் இருந்த பொருட்களை வீசி சேதப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபர் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புதிய பஸ்நிலையத்தில் உள்ள கடைக்குள் செல்லும் அந்த நபர், சில பொருட்களை எடுத்து கீழே வீசி சேதப்படுத்தும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும், தன்னிடம் துப்பாக்கி உள்ளது எனவும், சுட்டு கொன்றுவிடுவதாகவும் அங்கிருந்த ஊழியர்களுக்கு அந்த வாலிபர் மிரட்டல் விடுத்து விட்டு, சிறிது நேரத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கடையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அவர் எங்கு இருக்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story