மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி பொதுமக்கள் மறியல்
பரதராமி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார். சிகிச்சையளிக்க டாக்டர் இல்லை என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்
பரதராமி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார். சிகிச்சையளிக்க டாக்டர் இல்லை என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலிபர் பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பெருமாள் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் பார்த்திபன் (வயது 23). பரதராமி பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவர். பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று மாலையில் பார்த்திபன் மோட்டார் சைக்கிளில் பரதராமி அடுத்த பெருமாள் பள்ளி இந்திரா நகர் அருகே வரும்போது, எதிரே மாணவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பார்த்திபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், அக்கம்பக்கத்தினர் பார்த்திபனை பரதராமி உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆட்டோவில் கொண்டு வந்தனர். அப்போது அங்கு டாக்டர் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் பரிசோதனை செய்துள்ளார். இந்த நேரத்தில் பார்த்திபன் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனையடுத்து பார்த்திபனின் உறவினர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதியத்திற்கு மேல் டாக்டர் இருப்பதில்லை என்றும், 24 மணி நேரமும் டாக்டர் வேண்டும் எனவும் உடனடியாக டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி பரதராமி மெயின் ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இந்த மறியல்காரணமாக குடியாத்தம்- சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story