தம்பதியை தாக்கி கொலைமிரட்டல்; 5 பேருக்கு வலைவீச்சு


தம்பதியை தாக்கி கொலைமிரட்டல்; 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 March 2022 4:55 PM IST (Updated: 8 March 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்

ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் தம்பதியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
காயல்பட்டினம் கோமான் நடுத்தெருவை சேர்ந்தtவர் யாகூப் (வயது 54). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாஜிதா பர்வீன். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் அவர் வெளிநாட்டில் இருந்து காயல்பட்டினம் வந்தார். நேற்று முன்தினம் மாலையில் மனைவி, மகன்களை அழைத்துக்கொண்டு காயல்பட்டினம் கடற்கரைக்கு பொழுதுபோக்குக்காக சென்றுள்ளார். அங்குள்ள பொருட்காட்சியை பார்த்துவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். 
ஆட்டோ மோதியது
அப்போது அங்கு வந்த பரிமார் தெருவை சேர்ந்த கருனைமொய்தீன் மகன் அன்சாரி என்பவர் ஓட்டிவந்த ஆட்டோ, யாகூப் மீது மோதியது. இதை கண்டித்த யாகூப்பை அன்சாரி அவதூறாக பேசியுள்ளார். மேலும் போன் மூலம் தனது சகோதரர் ஜ்மத், அவரது நண்பர்கள் பரிமார் தெருவை சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் சாகுல் அமீது, அதே தெருவை சேர்ந்த அபு, சுலைமான் நகரைச் சேர்ந்த அசன் ஆகியோரை அங்கு அன்சாரி வரவழைத்துள்ளார். 
தாக்குதல்
பின்னர் அன்சாரி உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சேர்ந்து யாகூப், அவரது மனைவி சாஜிதா பர்வீன் ஆகிய 2 பேரையும் சரமாரியாக தாக்கினர். 
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்து அன்சாரி உள்பட 5 பேரும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றனர். 
இதில் காயமடைந்த யாகூப் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 
அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அன்சாரி உள்ளிட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story