பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 8 March 2022 5:52 PM IST (Updated: 8 March 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி: 


சுற்றுச்சூழல் சாம்பியன் விருது
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களான தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பு வழங்கப்பட உள்ளது.

சுற்றுச் சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, தயாரிப்புகள் தொழில் நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்குட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது வழங்கப்பட உள்ளது.

குழு மூலம் தேர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சாம்பியன் விருது வழங்கப்படும். இதற்காக தேனி மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் 'பசுமை சாம்பியன் விருது' என குறிப்பிட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

இதற்கு விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு தேனியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story