இளம்பெண் சரமாரி குத்திக்கொலை; கணவர் வெறிச்செயல்
தூத்துக்குடியில் இளம்பெண்ணை சரமாரியாக குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
புதுப்பெண்
தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் பொன்ராஜ். கார் டிரைவரான இவருக்கும், தாளமுத்துநகர் பாலதண்டாயுதநகரை சேர்ந்த மாரிசெல்வி (வயது 19) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்தில் வைத்து திருமணம் நடந்தது. அதன்பிறகு கணவன்-மனைவி அண்ணாநகரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பொன்ராஜ் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பொன்ராஜ் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
குத்திக்கொலை
நேற்று முன்தினம் இரவு பொன்ராஜ், தனது 2 நண்பர்களுடன் பாலதண்டாயுதநகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த மாரிசெல்வியை பேசுவதற்காக அழைத்தாா். அவர்கள் வீட்டின் காம்பவுண்டு உள்பகுதியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மாரிசெல்வியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த மாரிசெல்வியின் தாயார் மாரியம்மாளுக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மாரிசெல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதற்கிடையே, இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாரிசெல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கத்திக்குத்து காயம் அடைந்த மாரியம்மாளுக்கும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். திருமணமான 5 மாதங்களில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டதால், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியனும் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடியில் புதுப்பெண்ணை அவரது கணவரே குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-------------
Related Tags :
Next Story