மண்பானை தயாரிப்பு புத்துயிர் பெறுமா


மண்பானை தயாரிப்பு புத்துயிர் பெறுமா
x
தினத்தந்தி 8 March 2022 7:11 PM IST (Updated: 8 March 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

மண்பானை தயாரிப்பு புத்துயிர் பெறுமா

ஆரோக்கியத்தை அள்ளித் தந்து உடல்நலனை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மண்பாண்டங்கள். ஆதி மனிதனின் முதன்மை தொழிலாக கருதப்படுவதும் மண்பாண்ட தொழில்தான்.   பல்வேறு வண்ணங்களில் விதவிதமான வடிவத்தில் வீட்டை அலங்கரித்து வந்த மண்பாண்டங்கள், நாகரிகம் என்னும் மாயையால் விடை பெற்றுவிட்டது. எப்போது சமையலில் மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்ததோ அன்றே பல்வேறுவிதமான நோய்கள் உடலை தொற்றிக்கொண்டது. அதில் இருந்து மீள முடியாமல் இன்று வரையிலும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப விதவிதமான உருவங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.அதன் மகத்துவத்தை உணர்ந்த இன்றைய தலைமுறையினர் மெல்ல மெல்ல அதன் பயன்பாட்டுக்கு மாறி வருகின்றனர். ஆனால் பரம்பரை பரம்பரையாக தொழிலில் ஈடுபட்டு வந்த மண்பாண்ட உற்பத்தியாளர்கள் போதிய உதவி கிடைக்காததால் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 
இதுகுறித்து மண்பாண்ட உற்பத்தியாளர் கூறியதாவது
உதவி செய்ய வேண்டும்
மண்பாண்டங்கள் உற்பத்திக்கு தேவையான களிமண்ணை நீர்வழித்தடங்கள் ஓடைகளில் இருந்து சரக்கு வாகனத்தின் மூலமாக எடுத்து வருகின்றோம். பின்பு அந்தமண்ணை சலித்து சுத்தப்படுத்தி வெயிலில் காய வைப்போம். நன்றாக காய்ந்த பின்பு மணலில் கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊறவைப்போம்.இதையடுத்து அதை நன்றாக மிதித்து பக்குவப்படுத்தி மரச்சக்கரத்தின் மையப்பகுதியில் வைத்து தேவையான உருவங்களில் பானைகளை வடித்தெடுப்போம்.அதைத் தொடர்ந்து அதன் உருவத்தை ஒழுங்குபடுத்தி நிழலில் உலர்த்தி வெயிலில் காயவைத்து அதன் பின்பு தீ மூட்டி பக்குவப்படுத்தி உருவத்தையும் உறுதித் தன்மையையும் இறுதி செய்கிறோம்.
இவ்வாறாக நாளொன்றுக்கு 20 பானைகள் தயாரிக்க முடியும். ஆனால் மண்எடுத்து வருகின்ற செலவு, உற்பத்திகூலி போன்றவை கழித்தால் ரூ. 300 மட்டுமே கிடைக்கும். இதனால் ஏராளமானோர் மண்பாண்ட தொழிலை கைவிட்டு விட்டு வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். அரசு நிதியுதவி அளித்தால் ஊக்கத்தோடு உற்பத்தியில் ஈடுபடமுடியும். இதனால் மண்பாண்டங்கள் உற்பத்தி தொழிலும் புத்துயிர் பெறும்.அதிகப்படியான மண்பானைகளை தயாரித்து பொதுமக்களின் உடல்நலனை காக்க தொழிலை திறம்பட செய்ய முடியும்.கோடை காலம் தொடங்கி உள்ளதால் மண் பானைகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. 
 இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

Next Story