தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும்


தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 8 March 2022 7:23 PM IST (Updated: 8 March 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும்

உடுமலையை அடுத்துள்ள பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலைகளால் மாசு  ஏற்படுவதாகவும், அதனால் அந்த ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
உடுமலை தாலுகா குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ளது பெரியபட்டி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிலர் தேங்காய் தொட்டியை எரித்து கரியாக்கும், தேங்காய் தொட்டி கரி சுடும் ஆலையை குடிசைத்தொழில் போன்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த கரி, கார்பன் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதற்கான நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த தேங்காய் தொட்டி சுடப்படும்போது ஏற்படும் புகையினால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், அந்த இடத்தை கழுவும் தண்ணீரால் நிலத்தடி நீர்மாசுபடுவதாகவும், அதனால் அனுமதியின்றி செயல்படும் அந்த ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதியைச்சேர்ந்த விவசாயிகள், அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டம்
இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 30 பேர் நேற்று உடுமலை தாலூகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தாசில்தார் அறைக்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தை நடத்த தயாராகினர்.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் தாசில்தார் கணேசன் பேச்சு வார்த்தை நடத்தினார். தாசில்தார் அலுவலக அறையில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல், குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மாசு கட்டுப்பாட்டு துறை உதவிப்பொறியாளர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது இந்த கோரிக்கை மீது மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த சங்கத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story