குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
x
தினத்தந்தி 8 March 2022 8:45 PM IST (Updated: 8 March 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

குறிஞ்சி மலர்கள் 

குறிஞ்சி மலர்கள் மிதமான சீதோஷ்ண நிலையில் மலை பிரதேசங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். நீல நிறத்தில் பூக்கும் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்க கூடிய தன்மை உள்ளது. நமது நாட்டில் 33 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 17 வகை மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. இதில் ஸ்டபிலான்தஸ் என்ற வகையை சேர்ந்த குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்கின்றன. இந்த மலர்கள் பூத்துள்ள பகுதி நீல நிறத்தில் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

பூத்து குலுங்குகிறது 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்கா உள்ளது. தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த பூங்காவில் மலர்கள் மட்டுமின்றி நூற்றாண்டு பழமை வாய்ந்த அபூர்வ மரங்களும் உள்ளன. 

இந்த பூங்காவில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகிறது. இந்த பூங்காவுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்கள் அருகே சென்று சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் புகைப்படமும் எடுத்து மகிழ்கிறார்கள்.

பார்த்து ரசிப்பு

சிலர் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அதுபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த மலர்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். 

இந்த பூங்காவில் உள்ள நர்சரியில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களின் நாற்றுகளும் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.


Next Story