பசுமாட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை
தேவர்சோலை அருகே பசு மாட்டை சிறுத்தை அடித்துக்கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கூடலூர்
தேவர்சோலை அருகே பசு மாட்டை சிறுத்தை அடித்துக்கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
பசுமாடு மாயம்
கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் -2 பகுதியை சேர்ந்தவர் சித்தன். இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல மேய்ச்சலுக்கு கால்நடைகளை அனுப்பி வைத்தார். ஆனால் மாலையில் ஒரு பசுமாடு வீடு திரும்பவில்லை.
சிறுத்தை அடித்து கொன்றது
இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் அந்த மாட்டை தேடினார். அப்போது தேயிலை தோட்டத்தில் உடல் முழுவதும் படுகாயத்துடன் அந்த பசுமாடு உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். அதில் அந்த பசுமாட்டை சிறுத்தை அடித்து கொன்றது தெரியவந்தது. அத்துடன் சிறுத்தை வந்து சென்றதற்கான கால் தடயங்களும் இருந்தன.
தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் அந்த பசுமாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பசுமாட்டை சிறுத்தை அடித்து கொன்ற தால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
கடந்த வாரம் சூசம்பாடியில் கால்நடைகளை புலி அடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் புலியின் உருவம் பதிவானதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அடித்து கொல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story