ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாட்டு போட்டிகள்


ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 8 March 2022 8:56 PM IST (Updated: 8 March 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் தினத்தையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பங்கேற்று விளையாடினார்.

ஊட்டி

மகளிர் தினத்தையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பங்கேற்று விளையாடினார். 

மகளிர் தின விழா

ஆண்டுதோறும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், மகளிர் தின விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. 

மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி பலூன்களை பறக்க விட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேக் வெட்டப்பட்டது. 

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி பேசும்போது, மகளிர் தினத்தை பெண்கள் மட்டும் கொண்டாடாமல் குடும்பத்தில் உள்ள தந்தை, மகன்கள் கொண்டாட வேண்டும். 

போராட்டங்களை கடந்து வராமல் சாதிக்க முடியாது. பிரச்சினைகளை எதிர்கொள்ள பெண் குழந்தை களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். சாதிக்க முடியாது என்று யாராவது கூறினால் சாதித்துவிட்டு அவர்கள் முன்பு நிற்க வேண்டும் என்றார்.

கயிறு இழுத்தல்

தொடர்ந்து பலூன் ஊதி உடைத்தல், இசை நாற்காலி, இசை பந்து, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். 

அவர்கள் ஆர்வமுடன் பெரிய புல்வெளி மைதானத்தில் வட்டமாக நின்றபடி போட்டிகளில் பங்கேற்றனர். கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகிய போட்டியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினார்கள். 

தொடர்ந்து அரசு அலுவலர்கள் படுகர் இன மக்களின் நடனம் ஆடினர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினியும் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.  

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பின்னர் மூதாட்டிகளின் கோலாட்டம் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். பூங்காவில் பெண் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

விழாவில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா, மாவட்ட சமூக நல அதிகாரி பிரவீனா, சுற்றுலா அலுவலர் உமா சங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு கோல போட்டி நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story