ஊதிய உயர்வு குறித்து விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை


ஊதிய உயர்வு குறித்து விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 8 March 2022 9:38 PM IST (Updated: 8 March 2022 9:38 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு குறித்த விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடந்தது.

கூலி உயர்வு பேச்சுவார்த்தை

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, அம்மையார் குப்பம், அத்திமாஞ்சேரி பேட்டை, ஆர்.கே.பேட்டை, வங்கனூர், மத்தேரி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர் கூட்டமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

தொழிலாளர்கள் தரப்பில் கடந்த 10 ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் விசைத்தறி நெசவாளர்களின் கூலி மட்டும் உயர்த்தப்படவில்லை எனவும், 2013-2014 கூலி உயர்வு ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும், ஒரே மாதிரியான ரகங்களுக்கு ஒரே கூலி தரப்படவேண்டும். வேறுபாடுகள் இருக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு

விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில், ஜி.எஸ்.டி. பெரிய பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், வாரத்திற்கு இரு முறை நூல் விலையேற்றத்தால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை குறித்து ஆர்.டி.ஓ. சத்யா கூறியதாவது:-

விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் கூலி உயர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் சில கோரிக்கைகள் குறித்து உரிமையாளர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

300-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் 10 மணி நேரத்திற்கும் மேலாக குவிந்ததால், அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடையடைப்பு

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, ஆர்.கே. பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனூர், சொரக்காய் பேட்டை விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு அளிக்க வேண்டும் என்று கூறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விசைத்தறி பணிகள் நடைபெறாமல் முடங்கி உள்ளன. இந்த நிலையில் நேற்று விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இந்த பகுதியில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு செய்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story