மகளிர் தின விழா கொண்டாட்டம்


மகளிர் தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 9:42 PM IST (Updated: 8 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

திண்டுக்கல் :
போலீஸ் சார்பில் மகளிர் தினவிழா
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில், திண்டுக்கல் டி.எஸ்.எல். திருமண மண்டபத்தில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட பெண் போலீசார், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, பெண் போலீசாருக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.


மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு லாவண்யா, துணை சூப்பிரண்டுகள் கோகுலகிருஷ்ணன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெண்களின் பெருமை குறித்து பேசினர். நிகழ்ச்சியில் பெண் போலீசார் ‘கேக்’ வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினா். மேலும் மகளிர் தினத்தையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 
இதபோல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சு பெண் ஊழியர்கள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரி சேலை அணிந்து வந்து பங்கேற்றனர். திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் ரெயில்வே பெண் போலீசார் பலர் ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்து பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெண் போலீசார் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்.
காந்திகிராம பல்கலைக்கழகம்
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை சார்பில் மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பல்கலைக்கழக மைதானத்தில் தொடங்கிய இந்த பயணத்தை, துணைவேந்தர்(பொறுப்பு) ரங்கநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பதிவாளர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

 நடைபயண ஊர்வலத்தில் தேசிய மாணவர் படை, சாந்தி சேனா அமைப்பு மற்றும் அனைத்து துறை மாணவ, மாணவிகள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்-மதுரை ரோடு, சின்னாளப்பட்டி பிரிவு, பூஞ்சோலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் வந்து சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தை ஊர்வலம் அடைந்தது. 
ஊர்வலத்தின்போது மகளிர் கல்வி, சமுதாயத்தில் பெண்களின் நிலை, பெண்கள் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்தியபடி வந்தனர். 
வேடசந்தூர் கோர்ட்டு
வேடசந்தூர் கோர்ட்டில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர் பாளையம் முருகேசன், முன்னாள் தலைவர் வேடசந்தூர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில் உரிமையியல் கோர்ட்டு நீதிபதி முருகநந்தி கலந்து கொண்டு ‘கேக்’ வெட்டி கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் பெண் வக்கீல்களுக்கு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வக்கீல் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், துணைத்தலைவர் நாகராஜ், பெண் வக்கீல்கள் ஜெயந்தி, கமலம், கோகிலா, சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரி
பழனி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தினவிழா நடந்தது. கல்லூரி நிறுவனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஜெயலட்சுமி, கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் ஸ்வேதா சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு நிறுவனர் ஷோபனா கலந்துகொண்டு மகளிர் நலன், பெண்கள் மேம்பாடு குறித்து பேசினார். பின்னர் மாணவிகளுக்கு மகளிர் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புனித அந்தோணியார் கல்லூரி
திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி செயலாளர் அருள்தேவி தலைமை தாங்கினார். முதல்வர் மேரி பிரமிளா சாந்தி முன்னிலை வகித்தார். 

விழாவில் மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் சுதா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சியாமளா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பெண்களின் முன்னேற்றம், நலன் குறித்து பேசினர். இதையொட்டி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருஇருதய கலை, அறிவியல் கல்லூரி
திண்டுக்கல் திருஇருதய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) லட்சுமி பிரியா தலைமை தாங்கி, மகளிர் திறன் மற்றும் மேம்பாடு குறித்து பேசினார். கல்லூரியின் இல்ல தலைவர் ஞான பிரகாசம், முதல்வர் இன்னாசி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தீபம் மகளிர் கூட்டமைப்பு 
வத்தலக்குண்டுவில் தீபம் மகளிர் கூட்டமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. இதற்கு வத்தலக்குண்டு டாக்டர் பரிமளாதேவி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் புனிதா வரவேற்றார். தீபம் கூட்டமைப்பு இயக்குனர் பிலீஸ், கிளாடின் செவிலியர் கல்லூரி முதல்வர் ஜெயராணி பிரேம்குமார், டாக்டர் ராமச்சந்திரன், திருச்சிலுவை கன்னியர் இல்ல தலைவி அமலி, தீபம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹிலாரியா சவுந்தரி, வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 


விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஒருங்கிணைப்பாளர் சாவித்திரி நன்றி கூறினார். முன்னதாக நடந்த மகளிர் தின ஊர்வலத்தை தீபம் கூட்டமைப்பு இயக்குனர் பிலீஸ், லியோனார்டு மருத்துவமனையில் இருந்து தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டுக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
என்.பி.ஆர்.கல்லூரி
நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் கவிதாஜவகர் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் இந்திய நாட்டில் உள்ள பெண் சாதனையாளர்களை பற்றி கூறி, அவர்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்றும், மாணவிகள் தங்கள் தாய், தந்தையரின் தியாகத்தை மனதில் கொண்டு ஒழுக்கத்துடன் கல்வி கற்று சமூகத்தில் சாதனை பெண்களாக திகழ வேண்டும் என்றும் பேசினார். 

விழாவில் என்.பி.ஆர்.கல்லுரி முதல்வர்கள் சரவணன் (கலைஅறிவியல்), ஆனந்த் (பாலிடெக்னிக்), தாமரைசெல்வி (கல்வியியல்) அன்னலட்சுமி (நர்சிங்) மற்றும் பேராசியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான சிகை அலங்காரம், மருதாணி இடுதல், நடனம், போன்ற போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புனித வளனார் மெட்ரிக் பள்ளி
திண்டுக்கல் புனித வளனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தாளாளர் ஜோஸ்பின்ஜெயராணி முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவி மோகனா, மாவட்ட தலைவர் ராசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டில் சிறந்த படைப்புகளை சமர்ப்பித்து தேர்வான 6-ம் வகுப்பு மாணவிகள் மகீதரா, ஜெஷிரா ஆகியோருக்கு பரிசு கேடயம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Next Story