விழுப்புரம் வி மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம் ஐகோர்ட்டு உத்தரவையடுத்து தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன


விழுப்புரம் வி மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம் ஐகோர்ட்டு உத்தரவையடுத்து தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 8 March 2022 10:21 PM IST (Updated: 8 March 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வி மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம் ஐகோர்ட்டு உத்தரவையடுத்து தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டன



விழுப்புரம்

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம்

விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. நகரில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கொண்டு வரப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக விழுப்புரம் காகுப்பம், எருமனந்தாங்கல் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் மேலும் ஒரு பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதற்கு தொட்டி கட்டுவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏரியில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஏற்கனவே காகுப்பம், எருமனந்தாங்கல் ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும், எனவே வி.மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி விழுப்புரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து விழுப்புரம் வி.மருதூர் ஏரி மீட்பு கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அகிலன்‌ என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 25.11.2021 அன்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், நீர்நிலைகளில் பொதுமக்கள் மற்றும் அரசு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர். அதன் பிறகு வி.மருதூர் ஏரியில் நடந்து வந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் திடீரென சாட்சி ஆதாரங்களை அழிக்கும் வகையில் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்தி பாதாள சாக்கடை குழியை மூடுவதற்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முயற்சி செய்தனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வி.மருதூர் ஏரி மீட்பு கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. 

வேறு இடத்துக்கு மாற்றம்

மேலும் இதுதொடர்பாக ஐகோர்ட்டில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு வி.மருதூர் ஏரியில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 25.2.2022 அன்று மீண்டும் வி.மருதூர் ஏரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், வி.மருதூர்‌ ஏரியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக‌ பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

பணிகள் நிறுத்தம்

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி விழுப்புரம் வி.மருதூர் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு தோண்டப்பட்ட பள்ளங்களை பொக்லைன் எந்திரம் மூலம் மூடும் பணியில் கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story