தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாமக்கல்:
புதிய கட்டிடங்கள் திறப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பண்ணை வளாக கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கோழிப்பண்ணைகளில் அலகு வெட்டுதல், தடுப்பூசி போடுதல் போன்ற சிறு, சிறு வேலைகளை மேற்கொள்ளும் வகையில், அலாய்டு பயிற்சி பெற நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் பாடம் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது தொடர்பான ‘சர்ட்டிபிகேட் கோர்ஸ்’ இந்த ஆண்டிலேயே இங்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியில் சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்காவை முந்தைய அரசு அவசர கோலத்தில் திறந்தது. தற்போது அங்கு போதுமான தண்ணீர் வசதியில்லை. மேட்டூரில் அங்கு தண்ணீர் கொண்டு வரும் சூழ்நிலை உள்ளது.
கோமாரிநோய் தடுப்பூசி
அந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி, தலைமை செயலாளர் தலைமையில், அந்த திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அவற்றை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
கோமாரிநோய் தடுப்பூசிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. மத்திய அரசு தான் கோமாரிநோய் தடுப்பூசி தரவேண்டும். கடந்த காலத்தில் கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்து இழுத்தடித்தனர். இந்த ஆண்டுக்கான கோமாரிநோய் தடுப்பூசி ஒட்டு மொத்தமாக பெறப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும்.
காலிப்பணியிடங்கள்
கால்நடை துறையில் காலியாக உள்ள, 1,500 டாக்டர்கள் பணியிடங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் உரிய தீர்வு கண்ட பின் அவை நிரப்பப்படும். இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக, மத்திய அரசிடம் கடிதம் வாயிலாக முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது முதல்-அமைச்சரின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story