நகை கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


நகை கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 March 2022 11:08 PM IST (Updated: 8 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

நகை கடன் தள்ளுபடி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


விழுப்புரம்

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியின் கிளையில் 5 பவுன் வரையிலான நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களில் சிலருக்கு அதற்கான தள்ளுபடி செய்ததற்கான ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வழுதரெட்டி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை நகர கூட்டுறவு வங்கி கிளை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமாதானம் பேசி அவர்களை வங்கி அதிகாரிகளிடம் பேசுமாறு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் பொதுமக்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் சென்று 5 பவுனுக்கு கீழ் அடகு வைத்து நகை கடன் பெற்ற தங்களுக்கு கடனை தள்ளுபடி செய்யுமாறு முறையிட்டனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், நகை கடன் தள்ளுபடிக்கான பெயர் பட்டியலில் உங்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை என்பதால், உங்களுக்கு தள்ளுபடி கிடையாது என்றும், அசலும், வட்டியும் செலுத்துமாறு கூறினர். இதனால் அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர், இதுபற்றி கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அல்லது மாவட்ட கலெக்டரிடம் முறையிடும்படி அவர்களிடம் வங்கி அதிகாரிகள் கூறினர். அதன்பேரில் இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கூறிவிட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story