வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தொடக்கம்
பருவம் தவறிய மழையால் 2 மாதம் தாமதமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தொடங்கி உள்ளது.
வேதாரண்யம்:
பருவம் தவறிய மழையால் 2 மாதம் தாமதமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணி தொடங்கி உள்ளது.
6 லட்சம் டன் உப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் இப்பகுதியில் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
வழக்கமாக ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். பின்னர் மழை காலத்தையொட்டி 3 மாதம் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும். மழைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கப்படும்.
உற்பத்தி பணி தொடக்கம்
அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்தி பணி தொடங்கப்பட்டது. அப்போது பெய்த மழையால் பணி நிறுத்தப்பட்டது. கடந்த மாதம்(பிப்ரவரி) 2-வது முறையாக மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு பருவம் தவறி பெய்த மழையால் பணி நிறுத்தப்பட்டது. 3-வது முறையாக உப்பு உற்பத்தி இந்த மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் 2 நாட்களாக பெய்த மழையால் மீண்டும் பணி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை நின்று வெயில் அடிக்க தொடங்கியதால் 2 மாதம் தாமதமாக உப்பு உற்பத்தி பணி தொடங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
2 மாதம் தாமதம்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெய்த மழையால் 2 மாதம் தாமதமாக உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் ஏக்கருக்கு 20 டன் உப்பு உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் தற்போது வரை 1 டன் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடைபெற்றாலும் ஆண்டுதோறும் செய்யப்படும் 6 லட்சம் டன் உற்பத்தி செய்ய முடியாது.
தற்போது பெய்த மழையால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து வெயில் அடித்தால் மட்டுமே இன்னும் ஒரு வாரத்தில் முழு வீச்சில் உப்பு உற்பத்தி தொடங்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story