குமரியில் 34,422 பேருக்கு ரூ.139½ கோடி நகை கடன் தள்ளுபடி
குமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 34,422 பயனாளிகளின் ரூ.139½ கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 34,422 பயனாளிகளின் ரூ.139½ கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நகைக்கடன் தள்ளுபடி
குமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் தெங்கம்புதூர், அருமநல்லூர், முகிலன்விளை மற்றும் சரக்கல்விளை ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒகி புயலால் குமரி மாவட்டம் சேதம் அடைந்தபோது பாதிப்புகளை பார்வையிட வந்த தலைவர்கள் எல்லாம் கன்னியாகுமரியில் இருந்த புகைப்பட கண்காட்சியை மட்டும் பார்த்துவிட்டு சென்றனர். அதே சமயம் தற்போது பெருவெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓடோடி வந்து சேத பாதிப்புகளை பார்வையிட்டார். மேலும் எந்த அளவிற்கு நிவாரண பணிகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்வையிடுவதற்காக நேற்று (நேற்று முன்தினம்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வந்தார்.
தேர்தல் வாக்குறுதி
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். குமரி மாவட்டம் வருகிற 5 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத வளர்ச்சியை காண வேண்டுமென்ற ஒரு முனைப்போடு பணியாற்றி வருகிறோம். குமரி மாவட்டத்தில் 127 கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொது கடன்களில் 34,422 பேருக்கு ரூ.139.63 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோடு நகையையும், சான்றிதழையும் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மொத்த நகைக்கடன் ரூ.17 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கணக்கு இருந்தது. ஆனால் இது தவறான கணக்கு என்றும், இதில் ஏதேனும் குளறுபடிகள் இருக்கலாம் என்றும் சொல்லி என்னுடைய துறை மூலமாக ஆய்வு நடந்தது. அப்போது சேலம் மாவட்டத்தில் ஒரு நபர் 1 கோடி ரூபாய்க்கு கடன் வைத்து இருந்தது தெரியவந்தது. மொத்த கடனில் 10-ல் ஒரு பங்கு கடன் சேலம் மாவட்டத்தில் மட்டும் இருக்கிறது. அதனை முழுமையாக பரிசீலனை செய்ததில் 5 பவுனுக்கு மேல் உள்ள நகைக்கடன்களை காட்டிலும் 5 பவுனுக்கு கீழ் நகைக்கடன் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 3-ல் ஒன்றாக குறைந்திருக்கிறது. எனவே அறிவித்தபடி 5 பவுன் நகைக்கடன் அல்லது 5 பவுனுக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள நகைக்கடன் கண்டிப்பாக தள்ளுபடி செய்யப்படும். கடந்த கால அரசு 5.50 லட்சம் கோடி கடன் வைத்திருந்தது. இதனை சரிசெய்வது மிகப்பெரிய சவாலாக இந்த அரசிற்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.பி. மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், துணைப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியன் (தக்கலை), சங்கரன் (நாகர்கோவில்), முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story