இந்தியாவில் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைனில் இருந்து திரும்பிய வேலூர் மாணவி கோரிக்கை
இந்தியாவில் தொடர்ந்து மருத்துவம் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய வேலூர் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்
இந்தியாவில் தொடர்ந்து மருத்துவம் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய வேலூர் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாணவி
இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உக்ரைனின் மருத்துவம் பயின்று வந்தனர். இந்த நிலையில் உக்ரைன் மீது கடந்த 24-ந் ரஷியா போர் தொடுத்தது. தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால் அங்கு சிக்கி தவிக்கும் மாணவ-மாணவிகளை மத்திய அரசு சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி வேலூர் தோட்டப்பாளையம் மகாகவி பாரதியார் தெருவை சேர்ந்த ஏகாம்பரம்-தேவி தம்பதியரின் மகள் ஜனனீ உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் உக்ரைனில் உள்ள வினிசாவில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தேன். நான் தங்கியிருந்த பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் போர் நடைபெற்றது. குண்டுகள் வெடிக்கும் சத்தம் அடிக்கடி கேட்டன. அறையின் கதவு, ஜன்னல்களில் அதன் அதிர்வை உணர முடிந்தது.
இந்தியாவில் படிக்க நடவடிக்கை...
வினிசாவில் இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவிற்கு சென்றேன். அங்கு ஒரு நாள் காத்திருப்புக்கு பின்னர் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு வந்தடைந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கும், பின்னர் காரில் வேலூருக்கும் வந்தேன். அடுத்த மாதம் தேர்வு நடைபெற இருந்தது. அதன்பின்னர் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் போரினால் தேர்வு எழுதாமல் பாதியிலேயே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இனிமேல் உக்ரைன் நாட்டிற்கு சென்று படிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனவே அங்கு மருத்துவம் படித்த மாணவர்கள் அனைவரும் இந்தியாவில் தொடர்ந்து படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களின் படிப்பு பாதியிலேயே நின்று விடும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story