நாமக்கல் கணேசபுரம் அஞ்சலகம் மகளிர் தபால் நிலையமாக மாற்றம்
நாமக்கல் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட கணேசபுரம் அஞ்சலகமானது அனைத்து மகளிர் தபால் நிலையமாக செயல்படுகிறது.
நாமக்கல்:
இந்திய அஞ்சல் துறையின் கோவை மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் 10 அஞ்சலகங்களில் அனைத்து மகளிர் தபால் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நாமக்கல் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட கணேசபுரம் அஞ்சலகமானது நேற்று முதல் அனைத்து மகளிர் தபால் நிலையமாக செயல்படுகிறது. இங்கு அனைத்து பிரிவுகளிலும் பெண்களே பணிபுரிந்து வருகின்றனர். இதன் தொடக்க விழா நேற்று கணேசபுரம் அஞ்சலகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தலைமை தாங்கினார். ராஜேஸ்குமார் எம்.பி., கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் அனைத்து மகளிர் அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தனர். இதில் தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னதாக கணேசபுரம் துணை அஞ்சலக அலுவலர் நதியா வரவேற்றார்.
தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அஞ்சலக கணக்கு புத்தகம் மற்றும் சிறந்த முறையில் வணிகம் செய்த பெண் பணியாளர்களுக்கு அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கோட்ட தலைமையிடத்து துணை அஞ்சல் கண்காணிப்பாளர் ஜெயந்தி குமாரி, நாமக்கல் கிழக்கு உட்கோட்ட அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் அண்ணாமலை, நாமக்கல் மேற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story