உக்ரைனில் போர் பயம் காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்தேன்-திருச்செங்கோடு திரும்பிய மருத்துவ மாணவி பேட்டி
உக்ரைனில் போர் பயம் காரணமாக மெட்ரோ ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்ததாக, திருச்செங்கோடு திரும்பிய மருத்துவ மாணவி தெரிவித்தார்.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு மாணவி
உக்ரைன் நாடு மீது ரஷியா போர்தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு, தங்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் உக்ரைனில் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்த மாணவி ஜனனி நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
அங்கிருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த அவர், பின்னர் வீடு திரும்பினார். போரின் மத்தியில் உக்ரைனில் இருந்து தப்பி வந்தது எப்படி? என்பது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரஷியா-உக்ரைன் போர்
உக்ரைனில் சுமார் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறோம். நான் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வந்தேன். உக்ரைன் மீது ரஷியா குண்டு மழை பொழிய தொடங்கியவுடன், நான் மற்றும் என்னுடன் தங்கி இருந்த இந்திய மாணவிகள் ஒரு வாரத்துக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வைத்தோம்.
இதனிடையே ரஷிய ராணுவம் கார்கிவ் நகருக்குள் புகுந்தவுடன், இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு, எப்படியாவது எல்லைக்கு வந்து விடுங்கள் என்று கூறினர். நாங்கள் தங்கி இருந்த பகுதியில் இருந்து பிற நாடுகளின் எல்லைகள் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.
ஒரு வாரம் பதுங்கல்
இதனால் என்ன செய்வதென்று திகைத்த நாங்கள், மெட்ரோ ரெயில் மூலம் செலோவேக்கியா நாட்டு எல்லைக்கு செல்ல முடிவெடுத்தோம். ஆனால் போர் பயம் காரணமாக நாங்கள் கார்கிவ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு வாரம் பதுங்கி இருக்க நேர்ந்தது. அங்கிருந்து வெளியே செல்ல மிகவும் பயமாக இருந்தது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு பிறகு மெட்ரோ ரெயில் மூலமும், 2 கிலோ மீட்டர் நடந்து சென்றும் செலோவேக்கியா எல்லையை அடைந்தோம். பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவை சேர்ந்த 159 பேருடன் நான் டெல்லி வந்து சேர்ந்தேன். அங்கிருந்து தமிழக அரசின் உதவியால் கோவை விமான நிலையத்துக்கு வந்தேன்.
கோரிக்கை
உக்ரைனில் 3 ஆண்டுகள் மருத்துவ படிப்பை நிறைவு செய்துள்ளேன். எனவே எங்களது பணமும், காலமும் விரயமாகாத வகையில் இந்தியாவிலேயே மருத்துவம் படிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வேறு நாடுகளில் மருத்துவ படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story