தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாமக்கல்:
கட்டிடங்கள் திறப்பு
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 5 பண்ணை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு உறுதுணையாக உள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் நாமக்கல் மாவட்டம் கோழி வளர்ப்பில் மிகப்பெரும் தொழிற்பேட்டையாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் பெருமை கொள்ளும் வகையிலே பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று உள்ளது. கால்நடை மருந்தகத்தில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும், குக்கிராமங்களில் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் தமிழகம் முழுவதும் 7,640 கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
5 ஆடுகள் வழங்கும் திட்டம்
ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் 38,800 ஏழை பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 1,500 பெண்கள் பயன் பெறுவார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் நாட்டு கோழிகளின் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், அதற்கான பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி, ரூ.6 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் நாட்டுக்கோழி பண்ணைகள் மற்றும் குஞ்சு பொறிப்புகளை ஓசூரில் தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி, தமிழகத்தில் உள்ள 7 கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் 31 மாணவ-மாணவிகள் எந்த வித கட்டணமுமின்றி பயில உள்ளனர்.
கால்நடை ஆம்புலன்ஸ்
கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் 32 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. கால்நடைகளுக்கு உடனுக்குடன் அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற அடிப்படையில் 234 தொகுதிகளிலும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நாமக்கல்லில் திருச்சி சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் அருங்காட்சியகம், செல்லபிராணிகள் புற நோயாளிகள் பிரிவு, சி.டி.ஸ்கேன் பிரிவு, பெரிய பிராணிகளின் புற நோயாளிகள் பிரிவு, செல்ல பிராணிகள் இனப்பெருக்க பிரிவு உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயாசிங் உள்ளிட்டோர் பார்வையிட்டு கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் கிராமங்களுக்கு சென்று நேரடியாக முட்டை விற்பனை செய்யும் வகையில் நடமாடும் முட்டை விற்பனை வாகனத்தையும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தீவன புல்வெட்டும் கருவி
பின்னர் கீழ்சாத்தம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவல்நாயக்கன்பட்டி, காளிச்செட்டிபட்டி, கீழ்சாத்தம்பூர், ஆர்.புதுப்பாளையம், வீரக்குட்டை, வில்லிபாளையம், படைவீடு ஆகிய இடங்களில் தலா ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 75 சதவீத மானியத்துடன் தீவன புல் வெட்டும் கருவிகளை நாமக்கல் மாவட்டத்தில் 150 பயனாளிகளுக்கு வழங்கிடும் விதமாக, 5 பயனாளிகளுக்கு தலா ரூ.19,676 மதிப்பிலான தீவன புல் வெட்டும் கருவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ, நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story