குமரியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மகன் கொன்று புதைப்பு உடலை தோண்டி எடுக்காததை கண்டித்து உறவினர்கள் போராட்டம்
குமரியில் பஞ்சாயத்து தலைவர் மகன் கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நேற்று போலீசார் உடலை தோண்டி எடுக்கவில்லை. இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
குமரியில் பஞ்சாயத்து தலைவர் மகன் கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில் நேற்று போலீசார் உடலை தோண்டி எடுக்கவில்லை. இதனை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஞ்சாயத்து தலைவர் மகன்
நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 56). இவர் குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அயக்கோடு பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவருடைய மகன் லிபின் ராஜா (23), ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4-ந் தேதி இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் லிபின் ராஜா காணாமல் போனதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
கொன்று புதைப்பு?
இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பனை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ‘உங்கள் மகன் லிபின் ராஜாவை கொன்று பழவூர் தேசிய நெடுஞ்சாலை அருகே மண்ணில் புதைத்துள்ளோம்.
மண்ணை தோண்டி உடலை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்லப்பன் உடனே போலீசாரிடம் கூறினார்.
தோண்டி எடுக்கவில்லை
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் பழவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் செல்லப்பனை அழைத்துக் கொண்டு பழவூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் நேற்று முன்தினம் போதிய நேரம் இல்லாததால் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும் லிபின் ராஜா உடலை தோண்டி எடுக்க முடியாமல் போனது.
இதனைதொடர்ந்து நேற்று ராதாபுரம் தாசில்தார் ஏசுராஜன் முன்னிலையில், உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து காலதாமதமாகி கொண்டே இருந்தது.
உறவினர்கள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமயசிங் மீனா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மர்ம நபர் யார்?
இதற்கிடையே செல்லப்பனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. செல்லப்பனிடம் பேசிய மர்ம நபாின் செல்போன் எண் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. மேலும் சம்பவத்தன்று லிபின் ராஜாவை அழைத்து சென்ற மர்ம நபர்களின் செல்போன் எண்களும் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. எனவே இச்சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
--------------
Related Tags :
Next Story