குமரியில் புதிதாக 2 ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
குமரி மாவட்டத்தில் புதிதாக 2 ஆம்புலன்ஸ் சேவைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் புதிதாக 2 ஆம்புலன்ஸ் சேவைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
ஆம்புலன்ஸ் சேவை
குமரி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது. இதில் ஒரு ஆம்புலன்ஸ் பச்சிளம் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 2 புதிய ஆம்புலன்சுஸ்கள் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
புதிய மொபைல் ஆப்
மேலும், பொதுமக்களின் வசதிக்காக 108 அவசரம் என்ற மொபைல் ஆப் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இதன் மூலம் 108 சேவை மையத்தை அழைக்கும் போது அழைப்பவர்களுக்கு ஆம்புலன்ஸ் விரைவில் எளிதில் சென்றடைந்து முதலுதவி செய்ய வசதிகள் செய்யப்பட்டு உள்ளது” என்றார்.
விழாவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பிரகலாதன், மாவட்ட நல கல்வியாளர் சூரிய நாராயணன், திட்ட மேலாளர் ரன்சித் விஸ்வநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபின் கிங்ஸ்டன் ராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----
Related Tags :
Next Story