ஊதிய நிலுவை வழங்ககோரி கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்


ஊதிய நிலுவை வழங்ககோரி கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 9 March 2022 12:11 AM IST (Updated: 9 March 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கறம்பக்குடி:
ஊதியம் நிலுவை
கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என மொத்தம் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சில ஊராட்சிகளில் கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. 
புது விடுதி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் மற்றும் காவலர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து அந்த பணியாளர்கள் பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. 
பெருந்திரள் முறையீடு போராட்டம்
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், கறம்பக்குடி ஒன்றியத்தில் பணிபுரியும் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு அகவிலைபடி உயர்வுடன் ரூ.4,800 ஊதியம் வழங்க வேண்டும். 
அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ.1,000-ஐ உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
மனு கொடுத்தனர்
பின்னர் உள்ளாட்சி துறை  தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் திரவியராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சிகள்) சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story