கலப்படம் தொடர்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை
கலப்படம் தொடர்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
ராணிப்பேட்டை
கலப்படம் தொடர்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
பரிசு வழங்கும் விழா
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 24 பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். விழாவில் அவர் பேசியதாவது :-
தரத்தை பார்த்து வாங்க வேண்டும்
நுகர்வோர் உரிமைகள் என்பது விலை கொடுத்து வாங்கும் அனைத்து பொருட்களும் தரமானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றிடலாம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே தேசிய நுகர்வோர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நுகர்வோர்கள் பொருட்களின் தரத்தை பார்த்து வாங்க வேண்டும். விலையை பார்த்து தரமில்லாத பொருட்களை வாங்கக் கூடாது. நுகர்வோர்கள் விலைவாசி உயர்வை மட்டுமே பேசுகின்றனர். ஆனால் பொருட்களின் தரத்தினை ஆராய்வதில்லை. தரமான பொருட்களை பயன்படுத்துவதால் நம்முடைய உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
சிறுதானியங்கள்
பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இப்பொருட்களை நாம் உண்ணும் போது நமக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. நாம் எந்த ஒரு ரசாயனமும் கலக்காமல், பூச்சி மருந்து தெளிக்காமல், இயற்கையாக விளைவிக்கப்படும் சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கேழ்வரகில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும். அவ்வகையான உணவுப் பொருட்களால் நமக்கு உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
எந்த ஒரு பொருட்களையோ அல்லது மருந்துகளையோ வாங்கினால் அதன் விலையை மட்டும் பார்க்காமல் காலாவதியை பார்த்து வாங்க வேண்டும். பிளாஸ்டிக் கப்பில் டீ அருந்துவதை நாம் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கப்பை குளிர்பானம் அருந்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு
முதலில் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு கலப்படம் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையினர் நுகர்வோர் தொடர்பான விழிப்புணர்வுடன் வாழ்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மணிமேகலை, மண்டல மேலாளர் ராஜா, நியமன அலுவலர் மணிமாறன் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், நுகர்வோர் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story