சரணாலயத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் நீர் குறைந்து வருவதால் குஞ்சுகளுடன் ெசாந்த நாடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் திரும்பிச் செல்கின்றன.
சாயல்குடி
சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் நீர் குறைந்து வருவதால் குஞ்சுகளுடன் ெசாந்த நாடுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் திரும்பிச் செல்கின்றன.
பறவைகள் சரணாலயம்
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலச்செல்வனூர். இங்கு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய பறவைகள் சரணாலயங்களில் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயங்களும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் மீண்டும் ஏப்ரல் மாதம் திரும்பிச் சென்றுவிடும்.
இந்தநிலையில் இந்த ஆண்டும் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரத் தொடங்கின. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாயல்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் நீர் நிலையில் தண்ணீர் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் சீசன் முடியும் முன்பே ஏராளமான வெளிநாட்டு பறவைகள் திரும்பி சென்று விட்டன.
சொந்த நாடுகளுக்கு...
தற்போது இந்த சரணாலயத்தின் மரக்கிளைகளில் சாம்பல் நிற கூழைக்கடா, வெள்ளைநிற கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொரித்தன. அவைகள் அந்த குஞ்சுகளுடன் பறக்க தயாராகி வருகின்றன. கடந்த ஆண்டு மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு அதிகமான பறவைகள் வந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் பத்தாயிரம் பறவைகள் மட்டுமே வந்துள்ளதாகவும், அதிலும் பாதி பறவைகள் அதன் சொந்த நாடுகளுக்கு திரும்பி சென்று விட்டதாகவும், மீதமுள்ள பறவைகளும் இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த நாடுகளுக்கு சென்றுவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த பறவைகள் சரணாலயத்தின் நீர்நிலை மற்றும் மரக்கிளைகளில் தங்கியிருக்கும் கூழைக்கடா, நத்தை கொத்தி நாரை உள்ளிட்டவைகளை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
அதுபோல் இந்த பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளை யாரும் வேட்டையாடாமல் இருப்பதற்காக வனத்துறையினரும் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story