பேரூராட்சி தலைவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 4 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 1, முஸ்லிம் லீக் கட்சி 1, காங்கிரஸ் 1, சுயேச்சை 7, தே.மு.தி.க. 1 இடங்களிலும் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம் பெரும்பான்மையுடன் மங்கலம்பேட்டை பேரூராட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து, தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி 14-வது வார்டில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் வேல்முருகன், பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.
தி.மு.க. கவுன்சிலர் வெற்றி
அப்போது 8-வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சம்சாத் பேகமும் தலைவர் பதவிக்கு, வேல்முருகனை எதிர்த்து போட்டியிட்டார். இதில் சம்சாத் பேகம் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து நடந்த துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலிலும் வேல்முருகன் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வெற்றி பெற்று, துணை தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த நிலையில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர், தனது பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியே ஆகவேண்டும் என வலியுறுத்தி நேற்று மங்கலம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சி மற்றும் மகளிர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் சாமிதுரை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராஜீவ்காந்தி, மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய குடியரசு கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராஜ்குமார், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, ம.தி.மு.க. நகர செயலாளர் சுந்தர்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
உடனே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து இரவு 7 மணியை தாண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story