அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருக்கருகாவூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெலட்டூர்:-
நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருக்கருகாவூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர் அருகே உள்ள தென்கரை ஆலத்தூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சையில் இருந்து திருக்கருகாவூர் வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது, ‘தென்கரை ஆலத்தூர் அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த சில வாரங்களாக நெல்கொள்முதல் செய்து வந்த நிலையில் 5-ந் தேதி முதல் கொள்முதல் செய்யும் பணி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வைத்துள்ளனர்.
வீணாகும் நெல்
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. உடனடியாக கொள்முதல் செய்யும் பணியை தொடங்க வேண்டும்’ என்றனர். இந்த கோரிக்கை குறித்து போலீசார் அரசு நுகர்பொருள்வாணிபக்கழக உயர் அதிகாரிகளிடம் கூறினர். பின்னர் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள நெல் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளிக்கப்பட்டது.
இதனை ஏற்று விவசாயிகள் பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணிநேரம் அரசு பஸ்சை விவசாயிகள் சிறைபிடித்து வைத்திருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story