சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மேலும் ஒரு பெண் கைது


சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மேலும் ஒரு பெண் கைது
x
தினத்தந்தி 9 March 2022 2:03 AM IST (Updated: 9 March 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா(வயது 30). இவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்து வந்தார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேல் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்
விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை கீழப்பழுவூரை சேர்ந்த சந்திரா(30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் என்பதும், இதற்கு சாந்தா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தஞ்சை கீழவாசல் பாம்பாட்டி தெருவை சேர்ந்த வினோத்(29), வி.கைகாட்டியை சேர்ந்த பிரேம்(29), நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த பாலு என்ற பாலச்சந்தர் (27), செந்துறை மணப்பத்தூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தனவேல் (58), பாலியல் தொழிலில் சந்திராவுக்கு உதவியதாக கீழப்பழுவூரை சேர்ந்த வெற்றிக்கண்ணன் (37), திருமானூரை ேசர்ந்த தெய்வீகன் (49), சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு இடம் கொடுத்ததாக கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன் (62) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஒரு பெண் கைது
மேலும், இச்சம்பவம் தொடர்பாக தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரையும், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயங்கொண்டம் அருகே உள்ள அமிர்தராயன் கோட்டையை சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி இந்திரா(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக 3 நாட்கள் தனது வீட்டில் தங்க வைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story