நெல்லையில் ஆட்டோ ஓட்டும் சாதனை பெண்கள்
உலக மகளிர் தினத்தையொட்டி நெல்லையில் ஆட்டோ ஓட்டும் சாதனை பெண்கள் பேட்டி அளித்தனர். அப்போது அதில் ஒருவர், அரசு வேலையை உதறிவிட்டு சேவை செய்வதாக கூறினார்.
நெல்லை:
உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லையிலும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள். ஆணுக்கு பெண் சளைத்தவர் அல்ல என்பதை தற்போதைய விஞ்ஞான உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் நிரூபித்து வருகிறார்கள். வாகனங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே டிரைவர்களாக பணிபுரிந்து வரும் இந்த கால கட்டத்தில் நெல்லை மாநகரில் 16 ஆண்டுகளுக்கு முன்பே ஆட்டோ ஓட்ட தொடங்கிய சாதனை பெண்களும் உள்ளனர்.
பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியை சேர்ந்த தேவி மற்றும் காந்திமதி ஆகியோர் சொந்தமாக ஆட்டோக்களை வாங்கி கடந்த 2016-ம் ஆண்டு முதல் சாராள் சக்கர் கல்லூரி, தியாகராஜ நகர் பகுதிகளில் இயக்கி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து தற்போது ஜெயஸ்ரீ உள்பட 8 பெண்கள் மாநகர பகுதியில் ஆட்டோக்களை ஓட்டி வருகிறார்கள். மகளிர் தினத்தில் அவர்களது தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கண்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் தேவி கூறியதாவது:-
நாங்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதன் முதலாக ஆட்டோ பயணத்தை தொடங்கியபோது பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. சக ஆண் ஆட்டோ டிரைவர்கள் எங்களை போட்டியாக கருதாமல் தங்களது சகோதரி போல் கருதி உதவி செய்தனர். பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்லும்போது முகவரி கேட்பது, ஆட்டோ பழுதடைதல், பஞ்சர் போன்ற காலங்களில் சக ஆட்டோ நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் எங்களுக்கு உடனுக்குடன் உதவி செய்து உள்ளனர். அதனால்தான் தொடர்ந்து ஆட்டோ ஓட்ட முடிகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலை கிடைத்தது. இருந்தபோதும் மக்களுக்கு நேரடியாக அதிக உதவி செய்ய ஆட்டோ ஓட்டுவதே சிறந்த பணி என்று தொடர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த கொரோனா காலம், நாகப்பட்டினம் கஜா புயல் தாக்குதல் போன்ற கால கட்டங்களில் சமூக பணியிலும் ஈடுபட்டேன். `உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லாவிட்டால், கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை' என சுவாமி விவேகானந்தர் கூறி உள்ளார். அந்த வாசகத்தின் அடிப்படையில் தன்னம்பிக்கையுடன் பெண்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story