அ.தி.மு.க. நிர்வாகி மகன் உடலை தோண்டி எடுக்கக்கோரி உறவினர்கள் மறியல்
அ.தி.மு.க. நிர்வாகி மகன் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்டக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பழவூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
வடக்கன்குளம்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சீயோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 56). இவர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அயக்கோடு ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இவருடைய மகன் லிபின் ராஜா (வயது 23). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து செல்லப்பன் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் லிபின் ராஜா கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் பழவூர் நான்கு வழிச்சாலை அருகில் உள்ள வாய்க்காலில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தனர். அந்த இடத்தில் ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசியது. எனவே, அந்த இடத்தில் உடல் புதைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து நேற்று ராதாபுரம் தாசில்தார் ஏசுராஜன் முன்னிலையில், உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதில் காலதாமதம் ஏற்பட்டதால் லிபின் ராஜா தந்தை மற்றும் உறவினர்கள் கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து உடலை எடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
இன்று (புதன்கிழமை) காலையில் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். உடல் புதைக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படும் இடத்தில் தரையின் மேல்பரப்பில் மூடி கற்களை வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் பழவூர் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story