உலக அரங்கில் மோடிக்கு இருக்கும் தனி மதிப்பால் தான் உக்ரைனில் இருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் அண்ணாமலை பேச்சு


உலக அரங்கில் மோடிக்கு இருக்கும் தனி மதிப்பால் தான் உக்ரைனில் இருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 9 March 2022 2:29 AM IST (Updated: 9 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

உலக அரங்கில் மோடிக்கு இருக்கும் தனி மதிப்பால் தான் உக்ரைனில் இருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மணவாளக்குறிச்சி, 
உலக அரங்கில் மோடிக்கு இருக்கும் தனி மதிப்பால் தான் உக்ரைனில் இருந்து மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 
சமய மாநாடு
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடைவிழாவின் 10-வது நாளான நேற்று ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடந்த 85-வது இந்து சமய மாநாட்டில் தமிழக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜனதா தனியாக வளர்ந்து தமிழக அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. 
12 ஆயிரம் மாணவர்கள்
உக்ரைன் நாட்டில் போர் நடந்து வரும் சூழலில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி பேசி, உலக அரங்கில் அவருக்கு இருக்கும் தனி மதிப்பால் தான் உக்ரைனில் இருந்து 12 ஆயிரம் இந்திய மாணவர்களை மீட்டுள்ளார். 1,500 தமிழக மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்களை வழிநடத்தும் தகுதி பிரதமர் மோடிக்கு மட்டும் தான் உண்டு. 
உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க தமிழக அரசு மூன்றரை கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறியுள்ளது. நம் நாட்டு விமானபடை மூலம்தான் மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 300 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி திடீரென தமிழ்நாடு மீது பாசம் வைக்கிறார். கேரளாவில் செல்வாக்கு இழந்ததால் இனி தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதால், அடுத்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட திட்டமிட்டே ராகுல் காந்தி அப்படி பேசுகிறார். 
வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா கட்சி 400 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைக்கும். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு எம்.பி.யை அனுப்பி, மத்திய மந்திரியாக ஆக்க வேண்டும். 
பெண் தெய்வங்கள்
இந்து கடவுள்களில் 95 சதவீதம் பெண் தெய்வங்களாக உள்ளன. எனவே நமக்கு எல்லா நாட்களும் மகளிர் தினம்தான். ஆனால் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர்தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதை தொடர்ந்து ஏழை பெண் குழந்தைகளுக்கு திருமண வைப்புத்தொகை மற்றும் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், மாவட்ட பா.ஜனதா பொருளாளர் முத்துராமன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, ஹைந்தவ சேவாசங்க தலைவர் கந்தப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story