பண்ணையில் தீ விபத்து; 3 ஆயிரம் கோழிகள் கருகி சாவு
செண்பகராமன்புதூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் கருகி செத்தன.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயத்தை சேர்ந்தவர் அப்துல் உசேன் (வயது58). இவர் செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவில் பின்புறம் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தற்போது பண்ணையில் குஞ்சு கோழிகள் உள்பட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தன.
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் பெண் ஊழியர் ஒருவர் பண்ணையில் வேலை ெசய்து கொண்டிருந்தார். அப்போது, பண்ணையின் ஒரு பகுதியில் திடீரென தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பண்ணை முழுவதும் மள...மள...வென பரவ தொடங்கியது. இதுகுறித்து அவர் உரிமையாளர் அப்துல் உசேனுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு விரைந்து வந்து கோழிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் சரவணபாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே கறிகோழி வளர்ப்போர் சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் 3 ஆயிரம் கோழிகள் இறந்ததாக கூறப்படுகிறது.
கோழி பண்ணை அருகே உள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் தீ எரிந்ததாக கூறப்படுகிறது. அந்த தீயின் சாம்பல் காற்றில் பறந்து பண்ணை மீது விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story