திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது


திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழா  தொடங்கியது
x
தினத்தந்தி 9 March 2022 2:51 AM IST (Updated: 9 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பங்குனி திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமர்சையாக பங்குனி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
திருவிழா தொடர்ந்து வருகின்ற 23-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முருகப்பெருமான் முன்னிலையில் தங்க கொடிமரத்தில் பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

கொடியேற்றம்

மேலும் தர்ப்பைப்புல், மா இலை, மேலும் வாசனை கமழும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேளம் தாளம் முழங்க 10.49 மணிக்கு கொடியேற்றப்பட்டது..உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி காலையிலும், இரவிலுமாக தினமும் ஒரு வாகனம் வீதம் 15 நாட்களும் பல்வேறு வித,விதமான வாகனங்களில் சுவாமி, அம்பாளுடன் நகர் உலா வந்து அருள்பாலிக்கிறார்.

திருக்கல்யாணம்-தேரோட்டம்

.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 13-ந்தேதி கைப்பாரம், 18-ந்தேதி பங்குனி உத்திரம், 20-ந்தேதி பட்டாபிஷேகம், 21-ந்தேதி திருக்கல்யாணம், 22-ந்தேதி தேரோட்டம், 23-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Next Story