கர்நாடக சட்டசபையில் பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாதம்


கர்நாடக சட்டசபையில் பசவராஜ் பொம்மை-சித்தராமையா கடும் வாதம்
x
தினத்தந்தி 9 March 2022 3:31 AM IST (Updated: 9 March 2022 3:31 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் சப்கா சாத்-சப்கா விகாஸ் குறித்த விமர்சனத்தால் கர்நாடக சட்டசபையில் பசவராஜ் பொம்மை-சித்தராமையா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அமளி உண்டானது.

பெங்களூரு:

மஞ்சள் மார்க்கெட்

  கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரம் அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று 2-வது நாளாக தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-

  கடந்த 2021-ம் ஆண்டு பட்ஜெட்டில் கூறப்பட்ட திட்டங்களில் 52 அறிவிப்புகளை இந்த அரசு கைவிட்டுள்ளது. இதை அரசே தனது செயல்பாட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சாம்ராஜ்நகரில் மஞ்சள் மார்க்கெட்டை அமைப்பதாக அரசு அறிவித்து இருந்தது. அந்த மஞ்சள் மார்க்கெட்டை அமைக்கும் முடிவு அரசு கைவிடப்பட்டுள்ளது.

நிதியை ஒதுக்கவில்லை

  அதே போல் பல்வேறு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பட்ஜெட்டில் துறைகளுக்கு துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்தேன். ஆனால் அதன் பிறகு எடியூரப்பா முதல்-மந்திரியாக வந்த பிறகு துறைகளை 6 மண்டலங்களாக சுருக்கி நிதி ஒதுக்கீடு செய்தார். இதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

  இந்த அரசு புதிதாக ரூ.73 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக கூறியுள்ளது. இதனால் ஒரு ஆண்டுக்கு அசலும்-வட்டியும் சேர்த்து ரூ.43 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும். மக்களை ஏமாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 31 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்.

கர்நாடக அரசு தோல்வி

  15-வது நிதி குழு கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்கீட்டை 1.07 சதவீதத்தை குறைத்துவிட்டது. தனிநபர் வருமானம் அதிகரிப்பு மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியதால் இந்த நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

  கர்நாடகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.61 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி ஒழுங்குமுறையை காப்பாற்றுவதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது. ‘பிரதமர் மோடி சப்கா சாத் சப்கா விகாஸ்’ அதாவது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதாக அடிக்கடி சொல்கிறார். ஆனால் சப்கா சாத் சப்கா சர்வநாஸ் அதாவது அனைத்தையும் அழித்துவிட்டார்.
  இவ்வாறு சித்தராமையா கூறினார்.

காப்பாற்ற முடியவில்லை

  அப்போது சித்தராமையாவின் பேச்சுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘‘1970-ம் ஆண்டு வறுமையை ஒழிப்பதாக பிரதமராக இருந்த இந்திரா காந்தி கூறினார். வறுமை ஒழிந்துவிட்டதா?. நீங்கள் எத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளீர்கள். இன்னும் ஏன் வறுமையை ஒழிக்கவில்லை’’ என்றார்.

  அப்போது சித்தராமையா மற்றும் பசவராஜ் பொம்மை இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து, தங்களின் தலைவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டானது. இந்த அமளிக்கு இடையே சித்தராமையா பேசுகையில், ‘‘அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார் மயமாக்கி விற்று விட்டீர்கள். பாழாக்கிவிட்டீர்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதை உங்களால் காப்பாற்ற முடியவில்லை’’ என்றார்.

கடும் வாக்குவாதம்

  அதற்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, ‘‘மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது தான் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கை கொண்டு வரப்பட்டது. அப்போது தான் மத்திய அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தொடங்கப்பட்டது. தனியார் மயத்தை ஏற்படுத்தியதே காங்கிரஸ் தான்’’ என்றார்.

  இவ்வாறு 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் 5 நிமிடங்கள் நீடித்தன. காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசும்போது பா.ஜனதா ஆட்சியில் அனைத்தும் பாழாகிவிட்டதாக குற்றம்சாட்டினர். அப்போது மதிய உணவுக்கான நேரம் ஆனதை அடுத்து உணவு இடைவேளைக்காக சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.
  
ஈசுவரப்பா சண்டையை ஏற்படுத்துவார்

சித்தராமையா பேசுகையில், ‘‘நீங்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ய வேண்டாம். மந்திரி ஈசுவரப்பாவும் நேற்று (நேற்று முன்தினம்) குறுக்கீடு செய்தார். அதனால் நான் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஆனால் ஈசுவரப்பா உள்நோக்கத்துடனேயே குறுக்கீடு செய்வார். சண்டையை மூட்டிவிட வேண்டும் அல்லது சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுவார்’’ என்றார். அப்போது சபையில் இருந்த உறுப்பினர்கள் சிரிப்பலையில் மூழ்கினர்.

Next Story