முகநூல் மூலம் அறிமுகமாகி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.98 ஆயிரம் மோசடி;
முகநூல் மூலம் அறிமுகமாகி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.98 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட பெங்களூரூ வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு
பெருந்துறையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் முகநூலில் (பேஸ்புக்) பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் அறிமுகமானார். அவரிடம் இருந்து உதிரிபாகங்கள் விற்பனை திட்டம் என்ற ஒரு அறிவிப்பு வந்தது. அவரிடம் பார்த்திபன் தொடர்பு கொண்டு பேசியபோது உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்துவதற்கு முன்பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் கேட்ட ரூ.98 ஆயிரத்து 600-ஐ பார்த்திபன் அந்த நபரின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்.
அதன் பிறகு தொழில் தொடங்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அந்த நபர் எடுக்காமல் இருந்தார். இதுபற்றி அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது மேலும் பணம் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு அந்த நபரின் செல்போனுக்கு பார்த்திபனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பார்த்திபன் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலீஸ் ஏட்டு நித்தியா, போலீஸ்காரர்கள் நவீன்குமார், அப்துல் ரகுமான் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது பெங்களூருவை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story