‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 9 March 2022 3:57 AM IST (Updated: 9 March 2022 3:57 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் வினியோகிக்க வேண்டும்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது லக்கம்பட்டி பேரூராட்சி. இங்குள்ள கரட்டடிபாளையம் மெயின் ரோட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குடிநீர் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் ெசய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
அம்மாபேட்டை காலனி பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால்  கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர்  ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், அம்மாபேட்டை.


ரோட்டை சீரமைக்க வேண்டும்
கோபியில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் மேட்டுவளவு என்ற பகுதியில் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. சாலையோரம் செல்லும் பஸ் மற்றும் கார் போன்ற வாகனங்கள் தார் ரோட்டை விட்டு மண் ரோட்டில் இறங்கும் போது குலுங்குகிறது. இதனால் அதில் பயணம் செய்யும் பயணிகள் இருக்கையில் சரியாக உட்கார முடியாமல் விழுந்து விடும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே வாகனங்களுக்கு வழி விடுவதற்காக தார் ரோட்டை விட்டு மண் ரோட்டில் இறங்கும் போது விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே ரோட்டை சீரமைத்து சமனாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.

தேங்கும் தண்ணீர் வெளியேற்றப்படுமா? 
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சவீதா சிக்னல் செல்லும் சாலையில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அந்த குடிநீர் தொட்டியின் கீழே தண்ணீர் தேங்கி சாக்கடை போல் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டி கீழ் தண்ணீர் தேங்காதவாறு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், ஈரோடு


குப்பைகளை அகற்ற வேண்டும்
கோபி அக்ரஹாரம். கிருஷ்ணன் வீதியில் செடி, கொடிகள், காய்ந்த வாழை மரங்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. தற்போது அந்த குப்பை நன்றாக காய்ந்து காணப்படுகிறது. சமூக விரோதிகள் யாராவது தீ வைத்தால் அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குப்பை கொட்டப்பட்டு உள்ள இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டு, அதனால் கரும்புகை எழுந்தால் மாணவ- மாணவிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.


ஆபத்தான பள்ளம்
திருப்பூர், கோவை, மதுரை, பழனி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் அனைத்து பஸ்களும் அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் இருந்து வாசுகி வீதி, அகில்மேடு வீதி வழியாக பஸ் நிலையத்துக்கு செல்கிறது. இதில் வாசுகி முதல் வீதியில் பஸ்கள் திரும்பும் பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திவ்யா, ஈரோடு.

 வர்ணம் பூசப்படுமா?
கோபி டவுன் வாய்க்காலுக்கு செல்லும் ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வேகத்தடையின் ஒரு பகுதியில் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மற்றொரு பகுதியில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில், அந்த ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே வேகத்தடை மீது வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.

Next Story